×

ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் தலைவி திரைப்படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனுத்தாக்கல்!

சென்னை: ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் தலைவி திரைப்படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல் கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் வெளியிட தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் வாழ்க்கை விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிப்பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ஜெயலிதாவின் உறவினர் என்கிற முறையிலும், அவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது உடனிருந்தவர் என்னும் முறையில், தன்னைப் பற்றியும் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் எனவும் அது தன்னுடைய சுதந்திரத்தை பாதிக்கும் என்றும் ஜெ.தீபா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கானது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Ji Deepa ,High Court ,HC , Jayalalithaa, Thalaivi Movie, High Court, J.Deepa
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...